கடலை பருப்பே,

இவ்வளவு நாட்களாக எங்கிருந்தேன் என்பதை இன்னொரு நாள் கூறுகிறேன். அதற்கு முன்னால் ஒரு முக்கியமான செய்தி. நமது நாட்டின் ஜனாதிபதியாக யார் வர போகின்றார் என்ற நிலையில், இதை பற்றி என்னுடய கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். சில நாட்களுக்கு முன் சோனியா காந்தி அவர்கள் போன் செய்தார்கள். சுப்புணி தான் பேசினான். பாடில்(Patil) அவன் காதில் பாட்டில்(Bottle) என்று விழுந்து விட்டது. பழைய பேப்பர் கடைக்கு வந்த ராங்க் நம்பர் என்று சுப்புணி போனை கீழேவைத்து விட்டான்.

அது மட்டுமில்லாமல் இந்த தேர்தலில் பெண்களுக்கு தான் என்னுடைய ஆதரவை தர வேண்டும் என்று என் கனவில் வந்த முன்னாள் கவர்ச்சி நடிகை சொப்பனசுந்தரி கூறி விட்டாள் . எனவே ஷெகாவத் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்று வாஜபேயீ அவர்களுக்கு பே பே காட்டி விட்டொம்.

சரி. இப்பொழுது நமது வேட்பாளர் யார்? இந்த கேள்வியை நான் மெரினா பீச்சில் தனியாக அமர்ந்து மனசாட்சியுடன் கேட்டு கொண்டிருந்தேன். அப்பொழுது திடீர் என்று ஜாம்பஜார் ஜக்கம்மா என்ற பெண்மணி என்னருகில் வந்தார்கள். உடனே அவர்களையே நமது கட்சி வேட்பாளர் ஆக்கி விடலாம் என்று முடிவு செய்து சூட்டோடு சூடாக இந்த மடலை எழுதுகின்றேன்.

ஜனாதிபதி ஆவதற்கு ஜக்கம்மாவிற்கு என்ன தகுதி உள்ளது? அவர் ஒரு பெண். இந்திய நாட்டு குடிமகள். வேறு என்னய்யா தகுதி வேண்டும்? இருந்தாலும் தகுதி பற்றி கேள்வி கேட்கும் எதிர் கட்சி நண்பர்களுக்கு நான் கூறி கொள்வது என்னவென்றால்

‘யாரிடம் கேட்கிறாய் தகுதி? சொந்தமாக TV சேனல் வைத்திருக்கிறாயா? இல்லை ஒரு நியூஸ் பேப்பர் வைத்திருக்கிறாயா? ஊட்டியில் எஸ்டேட் வைத்திருக்கிறாயா? சுவிஸ் பாங்க்கில் அக்கவுண்ட் வைத்திருக்கிறாயா? இல்லை ஆயுத பேர ஊழல் ஆசாமியுடன் தான் நட்பு வைத்திருக்கிறாயா? இவற்றில் ஏதவது ஒன்றிற்கு ஆம் என்று கூறி இருந்தால் அடுத்த தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். இல்லையா? மானங்கெட்டவனே. யாரிடம் கேட்கிறாய் தகுதி. ABCD உங்கப்பன் தாடி வந்தா வாடி வராட்டி போடி’.

நாத்திக நண்பர்கள் கவலை பட வேண்டாம். ஜக்கம்மா அவர்கள் சளி பிடித்த போது கூட ஆவி பிடிக்கவில்லை என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன். என்னே அவர் தியாகம். இடது சாரி நண்பர்கள் மீதும் நமது ஜக்கம்மாவிற்கு பெரும் அன்பு உண்டு. மூஞ்சில என் பீச்சாங்கையை வக்க, வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும் என்று தமிழில் அடிக்கடி கூறுவார். இடது(LEFT), சிகப்பு(RED) இவற்றை பற்றி கூறுகிறார். நாத்திகவாதிகளின் நண்பர். இது போறாதா இடது சாரிக்கு? வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது தன் கையால் பஜ்ஜி செய்து கொடுப்பார் நமது ஜக்கம்மா. மற்றும் அவர்கள் கையை குலுக்கி Hi, Hello, Bye என்று கூறி விடுவார். ஆகவே நான் கூற வருவதென்னவென்றால் அனைவரும் ஜக்கம்மாவிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கின்றேன். நன்றி வணக்கம்.

திருட்டு முழியுடன்,
பிரபு